இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, 22-வது நாளாக இன்றுவரை இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், காஸா தரப்பில் 311 தீவிரவாதிகள் உட்பட 8,000 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி இஸ்லாம் அபு ருக்பே, கடற்படைத் தளபதி ரதேப் அபு சாஹிபான் ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இவர்களில் இஸ்லாம் அபு ருக்பே, ஹமாஸின் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், பாரா கிளைடர்கள், வான்வழி கண்டறிதல் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடும் தளபதியாக இருந்தவர்.
மேலும், அக்டோபர் 7-ம் தேதி தாக்குதலின்போது, தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைய பாரா கிளைடர்களைப் பயன்படுத்திய தீவிரவாதிகளை வழிநடத்தியதிலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பு நிலைகள் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
அதேபோல, ரதேப் அபு சாஹின், அக்டோபர் 7-ம் தேதி ஜிக்கிம் கடற்கரைப் பகுதி வழியாக ஊடுருவிய தீவிரவாதக் குழுவிற்கு தலைமை வகித்தவர் என்று தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் ரியர் அட்மிரல் டேனியஸ் ஹகாரி, இஸ்ரேலின் தரைப்படைகள் ஸ்ட்ரிப் பகுதியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. காலாட்படை, கவச, பொறியியல் மற்றும் பீரங்கி படைகள் நடவடிக்கையில் பங்கேற்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஒரே இரவில் நடந்த இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 2 ஹமாஸ் கமாண்டர்கள் கொல்லப்பட்டிருப்பது, ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் போரின் கட்டங்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.