குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை பயிர்கள் சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரி நதிநீர் பிரச்னையால் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததாலும், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் சேதமடைந்தது. இருப்பினும், மீதமுள்ள பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர்.
மேலும், நாகப்பட்டினம் விவசாயிகள் குறுவை பயிர்களை அறுவடை செவ்வதில் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர். குறைந்த பட்சம் முதலீடு செய்த பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர். 62,000 ஏக்கருக்கு மேல் பயிர் செய்து, 30,000 ஏக்கருக்கு மேல் நாசமாகிவிட்டது. தற்போது, 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள பயிர்களைக் கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் கூறுகின்றன.
எனவே, டெல்டா மாவட்டங்களில் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை, சம்பா, தாளடி பயிர்களை உற்பத்தி செய்யும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் உணவுத் தேவையில் 52 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.