மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா முதல் ஆட்டத்தில் 7-1 கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிருக்கான 7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் இராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
முதல் போட்டியானது இந்திய – தாய்லாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. இந்திய அணி சிறப்பாக விளையாடி, தனது முதலாவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. ஆனால் தாய்லாந்து அணி 22-வது நிமிடத்தில் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தது. இந்திய அணியின் சார்பில் சங்கீதா குமாரி சிறப்பாக விளையாடி 3 கோல் அடித்தார். மேலும், தீபிகா, மோனிகா, சலிமா டெடி, லால்ரெம்சியாமி தலா ஒரு கோலும் அடித்தனர்.