தமிழகத்தில் காவல்துறை அனுமதியுடன் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநிலத் தலைவர் முனைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநிலத் தலைவர் முனைவர் குமாரசாமி வெளியிட்ட அறிக்கையில், சமுதாய இயக்கமாகக் கடந்த 98 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) 99 -வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் ஒவ்வொரு ஆண்டும் அதன் நிறுவன தினமான விஜயதசமிக்கு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகவும், சமுதாயத்திற்கு நம்பிக்கை தரும் விதமாகவும், அணிவகுப்பு
ஊர்வலம் பொதுக் கூட்டத்தைக் கேரளம், மேற்குவங்கம் உள்பட நாடு முழுவதும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் 29.10.2023 ஞாயிறு அன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அந்த மாநில காவல்துறை அனுமதி வழங்கியதை அடுத்து புதுச்சேரியில் திட்டமிட்டபடி அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது.
அதன்படி புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் அருகிலிருந்து 29.10.23 அன்று மாலை 4.15 மணிக்கு அணி வகுப்பு ஊர்வலம் தொடங்க உள்ளது. அரியாங்குப்பம் சிக்னல் அருகில் மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுச்சேரியில் நடைபெற உள்ளதைப் போலத் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் காவல்துறை அனுமதியுடன் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.