திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டத்தை தமிழக பாஜக முன்னெடுக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான ஊழல் வழக்கு விசாரணையில், தமிழக பாஜக சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1996 – 2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, அமைச்சர், அவரது மனைவி, அவரது மாமியார் மற்றும் அமைச்சரின் இரண்டு நண்பர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, 2004 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிமன்றத்தாலும், பின்னர் 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தாலும் விடுவிக்கப்பட்டாலும், அன்றைய தமிழக அரசின் மேல்முறையீட்டில், உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக நியமிக்கப்பட்ட விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
கடந்த ஜூலை 6 மற்றும் ஜூலை 7, 2022 அன்று, விழுப்புரம் மாவட்டப் பொறுப்பில் இருக்கும் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள், சொத்துக் குவிப்பு வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றுமாறு அப்போதைய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். தலைமை நீதிபதி ஜூலை 8, 2022 அன்று இடமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
ஜூன் 6, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமான தகவல்கள் ஜூன் 23, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட்டன. அடுத்த நான்கு நாட்களுக்குள், வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி, 172 அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் 381 ஆவணங்களின் சாட்சியங்களை அட்டவணைப்படுத்தி, ஜூன் 28, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து 226 பக்க தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பை வழங்கிய சில நாட்களிலேயே, முதன்மை மாவட்ட நீதிபதி ஜூன் 30, 2023 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரும் அவரது மனைவியும், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி 2019 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, விசாரணை அதிகாரி செப்டம்பர் 2021 இல் புதியதாக ஒரு விசாரணையை மேற்கொண்டு, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்தத் துணை அறிக்கையில், அமைச்சரும் அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 71.54 லட்சம் மட்டுமே வைத்திருப்பதாகவும், 2012 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளபடி அதிகமான சொத்துக்கள் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது திமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் இந்த அறிக்கையை ஏற்று, முதன்மை அமர்வு நீதிபதி, டிசம்பர் 12, 2022 அன்று வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்தார்.
இந்த மூன்று அமைச்சர்களையும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்ததை எதிர்த்து, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் கையாளப்பட்ட விதம் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதால், உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு விசாரணையை தாமாக முன்வந்து தொடங்கியுள்ளார்.
இந்த வழக்குகள் கையாளப்பட்ட விதமும் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளின் போக்கும் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் நீதியரசர் கவலை தெரிவித்திருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக ஒரே போல அவசரகதியில் முடித்து வைக்கப்படுகின்றன. மேல்முறையீடும் செய்யப்படுவதில்லை.
இது அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாக உள்ளது. தமிழக அரசு விசாரணை அமைப்புக்களின் இந்தப் போக்கு. பொதுமக்களிடையே பலத்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களது இந்த விசாரணையைத் தடுக்கும் பொருட்டு. அவர் இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் கோரி, திமுக தரப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுகவினர், நீதியரசரை அவதூறாகப் பேசுவது உட்பட தொடர்ந்து பல நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர். கடந்த 2006 2011 திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும். அமைச்சரின் நண்பர் ஆகியோர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
எட்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு செப்டம்பர் 5, 2012 அன்று மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், நிர்வாக காரணங்களுக்காக இந்த வழக்கு 2014 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றமாக முதன்மை அமர்வு நீதிமன்றம்.
நியமிக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கும் மாற்றப்பட்டது. 2019 ஆம் ஆண்டு, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கின் விசாரணை அதிகாரி, மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமைச்சரும், இதர குற்றம் சாட்டப்பட்டவர்களும் எந்த முறைகேடும் செய்யவில்லை என்று கூறி, வழக்கைக் கைவிடக் கோரி அறிக்கை தாக்கல் செய்தார்.
அமைச்சரின் குடும்பம் வெறும் 1.49 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்திருப்பதாகக் கூறி, முதன்மை அமர்வு நீதிபதி, ஜூலை 20, 2023 அன்று வழக்கில் இருந்து மூன்று பேரையும் விடுவித்தார்.
அதே 2006-2011 திமுக ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பதவியில் இருந்த அமைச்சர் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது பிப்ரவரி 14, 2012 அன்று ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாகசொத்து சேர்த்திருப்பதாகக் குற்றம் சாட்டி நவம்பர் 15, 2012 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கும் 2019 ஆம் ஆண்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் பொன்முடி, தனக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர்கள் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திரு. தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றம் நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த ஊழல் சொத்துக் குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜகவின் கருத்துக்களை உச்சநீதி மன்றம் அனுமதிக்கவேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளோம்.
அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது.
திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.