பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அவர் பிறந்த ஊரான பசும்பொன்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான 28-ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழா நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
2-வது நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது. நிறைவு நாளான இன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் விழாக்கோலம் பூண்டுள்ளது.