சென்னை – சேலம் இடையே, தினசரி நேரடி விமான சேவை கொரோனா நோய் தொற்றின் போது நிறுத்தப்பட்ட நிலையில், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை – சேலம்
இடையிலான விமான சேவை இரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு நீங்கி இயல்பு நிலை திரும்பிய பின்னர் நாடு முழுவதும் மீண்டும் விமான சேவைகள் தொடங்கின. ஆனால், சேலத்துக்கு விமானம் இயக்கி வந்த ட்ரூஜெட் விமான நிறுவனம், விமான சேவையை மீண்டும் தொடங்கவில்லை.
சென்னை – சேலம் இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், சேலத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்க முன்வந்தது. அதன்படி, நேற்று முதல் சென்னை – சேலம் இடையே விமான சேவை தொடங்கியது.
சென்னையில் இருந்து சேலத்துக்கு நேற்று முதல் விமானம் காலை, 11:20 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில், கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, நடிகை நமீதா உட்பட 43 பயணிகள் பயணித்தனர். அவர்களுக்கு விமான ஊழியர்கள் ரோஜாப் பூ கொடுத்து வரவேற்றனர். மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சேலம் – சென்னை இடையே விமான சேவை தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.