களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டொமினிக் மார்ட்டின் வீட்டில் கேரள காவல்துறை சாட்சியங்களை சேகரித்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் அக்டோபர் 29 அன்று கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட காவல் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்தார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். மேலும் மார்ட்டின் மருத்துவப் பரிசோதனைக்காக எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பேரில், இந்த வழக்கு விசாரணையில் உள்ளூர் காவல்துறைக்கு உதவ, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டொமினிக் மார்ட்டின் வீட்டில் கேரள காவல்துறை சாட்சியங்களை சேகரித்தனர். இந்த வழக்கின் குற்றவாளி டொமினிக் மார்ட்டினை காவல்துறை விசாரணைக்காக இங்கு அழைத்து வந்து விசாரித்துவருகின்றனர்.
இந்த விசாரணையில் குண்டு வெடிப்புக்கான காரணங்கள் கண்டறியப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.