ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண், சிகாகோவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரும் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிப்பதற்காக, இஸ்ரேலின் நஹஸ் ஓஸில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர்.
இதையடுத்து, கத்தார் மற்றும் எகிப்து உதவியுடன் அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பிணைக் கைதிகளான ஜூடித் டாயா ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரை விடுவித்தனர். பின்னர், இருவரும் இஸ்ரேல் திரும்பினர்.
இந்த நிலையில், நடாலி ஷோஷனா ரானன் இஸ்ரேலில் இருந்து சொந்த நாடான அமெரிக்காவுக்குத் திரும்பி இருக்கிறார். சிகாகோ நகரிலுள்ள தனது வீட்டிற்கு நடாலி சென்றடைந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.
இதுகுறித்து மத்திய மேற்கு இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் கோஹன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாங்கள் நடாலி திரும்பியதைக் கொண்டாடும் அதேவேளையில், காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட 239 பிணைக் கைதிகள் குறித்தும் கவலைகொள்கிறோம். அதேசமயம், ஜூடித் தனது மகளுடன் அமெரிக்கா திரும்பவில்லை. இன்னும் இஸ்ரேலில் குடும்பத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கத்தார் அரசாங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். “கத்தார் அரசாங்கத்தின் மிக முக்கியமான உதவிக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம் நான் இஸ்ரேலில் இருந்தபோது, ஹமாஸ் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் அமெரிக்க குடிமக்களின் குடும்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறினார்.