வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் இயல்பை விட குறைவாகப் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தற்போது வரை, வட கிழக்கு பருவமழை இயல்பை விட 43 சதவீதம் குறைவாகப் பதிவாகி உள்ளது. அக்டோபர் மாதத்தைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளது.
கடற்கரை பகுதிகள் ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறினார்.