காசாவில், ஒருபக்கம் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மறுபக்கம் தரைவழித் தாக்குதலை அதிகரித்து வருகிறது.
கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.
காசாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது படிப்படியாக, தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே, காசாவின் பல பகுதிகளுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் படைகள், ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து அழித்தனர்.
இந்நிலையில், காசாவின் வடக்கு பகுதியில், இஸ்ரேல் படைகள் ஊடுருவி உள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகளை, இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், காசாவில் இஸ்ரேல் இராணுவ வாகனங்கள் ரோந்து செல்வதும், கட்டடங்கள் மற்றும் வீடுகளில், இராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதும் தெரிகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களில், காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 600-க்கும் மேற்பட்ட பதுங்குமிடங்களை அழித்ததாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட, ஐரோப்பிய நாடான ஜெர்மனைச் சேர்ந்த ‘டாட்டூ’ கலைஞர் ஷானி லுாக் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக, இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.