இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலியாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.
காசாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது படிப்படியாக, தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே போர் தொடர்ந்து 25-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலியாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 90.44 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.