கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், பட்டியல் இன மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், சோக்காடி ராஜன் என்பவர் உட்பட 13 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பொது மக்களும், அதன் அருகில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக, அப்பகுதியில் கிரானைட் கற்கள் கொண்டு பாலீஷ் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்போது, அதிலிருந்து வெளிவரும் தூசிகள் அருகில் உள்ள பட்டியல் இன மக்களின் வீடுகளிலும், அவர்கள் உண்ணும் உணவிலும் படிந்துள்ளது. இதனால், தூசி வராத அளவிற்கு தடுப்பை ஏற்படுத்த வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை மாற்று தரப்பினர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில், சோக்காடி ராஜன் தலைமையில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த 500 -க்கும் மேற்பட்ட மாற்றுச் சமூகத்தினர், அவர்கள் மீது உருட்டுக்கட்டை மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், பட்டியல் இன மக்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதில் பல வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. புகாரின் பேரில் இரண்டு தரப்பினர் மீதும் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.