எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட் – குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களின் ‘ஹேக்கிங்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ‘ஹேக்கிங்’ குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, ஆப்பிள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. நாடு முன்னேறுவதைக் காண விரும்பாத மக்கள் இதுபோன்ற அரசியலில் ஈடுபடுகின்றனர்” என்றார்.