இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுடை தயாரிக்க அமெரிக்க பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களும் பேரழிவை சந்தித்தன. இதில், இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், இதை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டை தயாரிக்க அமெரிக்க பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
அமெரிக்க பாதகாப்புத் துறையின் அறிவிப்பில் பெண்டகன் இதனை உறுதி செய்திருக்கிறது. மாறிவரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் எதிரிகளின் அச்சுறுத்தலே இந்த முடிவுக்கு காரணம் என்று விண்வெளிக் கொள்கைக்கான பாதுகாப்பு உதவிச் செயலர் ஜான் பிளம்ப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அணு குண்டுக்கு B61-13 என பெயரிடப்பட்டுள்ளது. இது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 24 மடங்கு சக்தி வாய்ந்தது, நாகாசாகியில் போடப்பட்ட அணுகுண்டை விட 14 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த குண்டு வடிவமைக்கப்பட உள்ளது. அதேபோல தரையில் விழுந்த பின்னர் வெடிப்பதற்கு பதிலாக, தரையை தொடுவதற்கு முன்னரே அது வெடித்துவிடும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
சமீபத்தில் சர்வதேச அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் மசோதாவிற்கு இரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்தது. மேலும், சீனா தனது அணு ஆயுதங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்துதான் தற்போது அமெரிக்கா தரப்பில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.