பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நவம்பர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாகச் சென்றார். அப்போது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது கை முறிந்தது. இதில், வாசனின் பைக் பல அடி தூரத்துக்குப் பறந்து போய் விழுந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைக் காஞ்சிபுரம் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன.
பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புழல் டி.டி.எப்.வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுமார் 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென டிடிஎப் வாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நிதிபதி உத்தரவிட்டார்.