தமிழகத்தில் தீபாவளி அன்று சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், பொது மக்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் பலகாரங்கள் சுவைத்து கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, விதவிதமான பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆனால், பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதாகவும், மாசு ஏற்படுவதாகவும் கூறி நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனால், பட்டாசுகள் தயாரிக்கவும், வெடிக்கவும் நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், அதேபோல, மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல, தீபாவளி பண்டிகை அன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.