சென்னையில் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில், சவேரா என்ற சமூக விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட உள்ளது.
சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில், மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சவேரா என்ற சமூக விழிப்புணர்வு விழா கொண்டாட உள்ளனர். இந்த நிகழ்வு வரும் 4 -ம் தேதி மற்றும் 5 -ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த விழா, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவன வளாகத்திலும், சென்னையின் இதர பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் நன்கொடை வழங்கும் நன்கொடை இயக்கமும் இதில் இடம் பெற உள்ளது.
இது, தனிநபர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள், கனவுகள், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஓரிடத்தை உருவாக்குவதற்கான கூட்டுத் தேடலாகும். சவேராவின் ஒவ்வொரு அம்சமும் பெருமகிழ்ச்சிக்கான காரணத்தைக் குறிப்பிட்ட நோக்கத்துடன் நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய ஐஐடி மெட்ராஸ்-ன் சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பின் ஆசிரியர் – ஆலோசகர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்களுடன் எங்களது மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியமும் நல்வாழ்வும் முதன்மையானவையாகக் கொண்டுள்ளோம்.
சவேரா மூலம் இக்கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அனைவரும் நாம் வாழும் உலகைப் பாராட்ட வேண்டும். இதனால் அவர்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய உந்துதல் பெறுவார்கள் எனக் குறிப்பிட்டார்.