மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் 748 பேருக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாகவே தனது திருக்கரங்களால் வழங்கினார். இதில் 602 பேருக்கு பிஹெச்டி என்ற முனைவர் பட்டமும், 143 பேர் பதக்கங்களும், ஒருவர் இலக்கிய முனைவர் பட்டமும், 2 பேர் அறிவியல் முனைவர் பட்டமும் பெற்றனர்.
மொத்தம் 1,34,531 மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றனர். இதில், 1,33,783 மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் பருவத் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அதேபோல் பருவத்தேர்வு முறையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அரங்கின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்லவும், குழந்தைகளை அழைத்து வரவும் அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மதுரை விமான நிலையம் முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறைனர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.