“இப்போதும் நாங்கள் ஒரே நாள் இரவில் மோசமான அணியாகிவிடவில்லை” – டாம் லதாம்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி நேற்றையத் தோல்வி மூலம் தனது ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை 330 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியது தங்களுடைய தோல்விக்கு காரணம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், “எங்களுடைய சிறந்த செயல்பாடு இது இல்லை. டி காக் – வாண்டர் டுசென் பார்ட்னர்ஷிப்பிற்கு பின் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம்.
இது மிகப்பெரிய இலக்கு. அதை துரத்திய நாங்கள் சில பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். அவர்கள் ஆரம்பத்திலேயே நல்ல நிலையை எட்டிய நிலையில் எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் நாங்கள் சில காயங்களையும் சந்தித்தோம்.
இருப்பினும் இதிலிருந்து விரைவாக வெளிவந்து பெங்களூருவில் நடைபெறும் அடுத்த போட்டியில் விளையாட தயாராகிறோம். இப்போதும் நாங்கள் ஒரே நாள் இரவில் மோசமாக அணியாகிவிடவில்லை” என்று கூறினார்.