நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மக்களவை நெறிமுறைக்குழு தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மக்களவை நெறிமுறைக்குழு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து மக்களவை நெறிமுறைக்குழு முன்பு இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியதாக செய்திகள் வெளியானது.
இதுதொடர்பாக பாஜக எம்பியும், மக்களவை நெறிமுறைக்குழு தலைவருமான வினோத் சோன்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விசாரணைக்குழுவின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக அநாகரீக முறையில் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களை மஹுவா மொய்த்ரா விமர்சித்ததாக தெரிவித்தார்.
“டேனிஷ் அலி, கிர்தாரி யாதவ் மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர், எங்களை குற்றம்சாட்ட முயன்று வெளியேறினர். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று வினோத் சோன்கர் குறிப்பிட்டார்.