கிரிக்கெட் ரசிகரின் மறைவுக்கு இலங்கை அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்துப் போட்டியில் விளையாடி வருகின்றனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி மும்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இன்றையப் போட்டியில் இலங்கை வீரர்கள் கையில் கருப்பு பட்டையை அணிந்துக் கொண்டு மைதானத்திற்கு வந்தனர். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் அமைப்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில், ” அபேசேகர இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டின் ஒரு அங்கமாக இருந்தார். மேலும் பவுண்டரி எல்லைக் கோட்டிற்கு அப்பால் இருந்து வீரர்களை ஆதரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் ஒரு முக்கிய பங்கை ஆற்றினார்.
இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில், அவர் அளித்த ஊக்கம் அளப்பரியது. கிரிக்கெட் பிரியர்களிடையே அவரது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்.” என கூறி உள்ளது.
1996 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி கோப்பை வென்ற போது தான் அங்கிள் பெர்சி முதன்முதலாக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகுக்கும் அறிமுகம் ஆனார். ஆனால், அதற்கு முன்பு இருந்தே இலங்கை கிரிக்கெட் அணியின் மீது பெரும் அன்பு கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் அவர்களை ஆதரித்து வந்தார் பெர்சி.
1996 உலகக்கோப்பை தொடரில் அவர் வெறும் இரசிகராக மட்டும் இல்லாமல், அணியில் ஒருவராக இருந்து, வீரர்களின் அறைக்கு இயல்பாக சென்று வரும் நபராக இருந்தார். வீரர்களை தொடர்ந்து உற்சாகமூட்டினார். அந்த உலகக்கோப்பைத் தொடரை இலங்கை அணி வென்றது. அப்போது வீரர்கள் மட்டுமின்றி, அங்கிள் பெர்சியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார்.
அவர் தனது 87வது வயதில் மறைந்தது ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட் உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் நினைவாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.