பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை கவனிக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனம், அரசு ஒப்பந்தக்காரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதலே வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி, திருவண்ணாமலை அருணை கல்லூரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, அவரின் உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, கடந்த 2021-ஆம் ஆண்டு எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. எ.வ.வேலுவின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் மட்டும் 10 கல்வி நிறுவனங்கள், ஆறாயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, ஃபைனான்ஸ் தொழில் ஆகியவை உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த தி.மு.க-வினர் தொடர்புடைய சொத்துப் பட்டியலிலும், அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்து மதிப்பு ரூபாய் 5,552.39 கோடி எனத் தெரிவித்திருந்ததும், குறிப்பிடத்தக்கது.