உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் மாறும் என்று மத்திய இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இந்தியா உற்பத்தி கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சியைத் தொடங்கிவைத்து, மத்திய இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் கூறியதாவது: “சிறுதொழிலகள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. மோட்டார் எவ்வளவு வேகமாக இயங்குகிறதோ, அவ்வளவு வேகத்தில் பொருளாதார வாகனம் நகர்கிறது. சிறு தொழில்கள் சமூகம், பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பெரிய தொழில்களை விட, சிறிய தொழில்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பெரிய தொழிற்சாலைகளும், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய தொழில்களை புறக்கணித்தால், நாடு முன்னேற்றம் அடையாது. கிராமங்கள், நகரங்களில் பல சிறிய தொழில்கள் இருந்தன. அவை மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தன.
பண்டைய காலத்தில் இந்தியாவில் பெரிய அளவில் தொழில்கள் இல்லை. ஜவுளி, இரும்பு, கப்பல் கட்டும் தொழிலால், இந்தியா உலகம் முழுவதும் அறியப்பட்டது. மூன்று தொழில்களும் நம்முடைய தொழில் திறமையை வெளிப்படுத்தின. பெரிய தொழில்களை விட, சிறிய தொழில்களில் எளிதில் மாற்றங்கள் செய்யலாம். பல நேரங்களில் புதிய தயாரிப்புகளை, சிறு தொழில் நிறுவனங்கள் தான் கண்டுபிடிக்கின்றன. சிறிய தொழில்கள் மீது கவனம் செலுத்துவது, கனரக தொழில்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை.
பொருளாதாரத்தின் கருத்தை, புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. சுயநல நோக்கத்திற்கும், லாப நோக்கத்திற்கு இடையில், நேர்த்தியான கோடு உள்ளது. லாபம் என்பது சுயநலம் அல்ல; நியாயமான பலன். கொரோனா காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்காக, மத்திய அரசு கூடுதல் கடன் வழங்கியது. ஆயுத இறக்குமதி கட்டுப்பாட்டுகளை விதித்த, முதல் அரசு நாங்கள் தான். ஐந்து நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை வெளியிட்டோம். அதன்கீழ் 509 உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றின் உற்பத்தி தற்போது இந்தியாவில் நடக்கிறது. பாதுகாப்பு, பொது நிறுவனங்களுக்காக நான்கு நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல், பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் கீழ் 4 ஆயிரத்து 66 பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். தொழில்துறைக்கு இலாபம், நஷ்ட அறிக்கையின் மீது எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே பொறுப்பு நாட்டின் மீதும் உள்ளது. கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் தொழில்கள் முன்னேறினால், வரும் காலத்தில் இந்தியா தன்னிறைவு பெற்று, உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும்” என்று தெரிவித்தார்.