ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப் பாடம் செய்வதில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், “நான் நேற்று சிந்த்வாராவுக்குச் சென்றிருந்தேன். அங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் சிக்கலில் இருக்கிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அங்கு அவர் தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை என்பது தெளிவாகிறது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி இன்று பேசுகிறார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் உள்ளிட்டோரும் பேசுகின்றனர்.
ராகுல் காந்தியின் அரசியல் எப்படி என்றால், யாராவது ஒரு விவகாரத்தை அவருக்குக் கொடுத்து விட்டால் போதும், அதையே பிடித்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். முதலில் ரஃபேல் விவகாரம் கிடைத்தது. பிறகு சாவர்க்கர், இப்போது ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு சீட்டை நிதீஷ் குமார் கொடுத்திருக்கிறார்.
ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை என்று மக்களவையில் கூறினேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை. பீகாரில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் பல தவறுகள் இருக்கின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக மிகவும் பின்தங்கிய மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் முதல்முறையாக முஸ்லீம்கள் முற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கியவர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள். நான் எனது கட்சியைப் பற்றி பெருமைப்படுகிறேன். காரணம், 80 பா.ஜ.க. எம்.பி.க்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
பா.ஜ.க.வில் அதிக எண்ணிக்கையிலான ஓ.பி.சி. எம்.எல்.ஏ.க்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இருக்கிறார்கள். பிரதமர் மோடியே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்தான். தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் திரௌபதி முர்மு முதல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவராவார். அதேபோல, ஏற்கெனவே குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்” என்றார்.