கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, குழித்துறை, தக்கலை, குளச்சல், மயிலாடி, பூதப்பாண்டி, கொட்டாரம், சுருளோடு, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, முள்ளங்கினாவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. ஏற்கனவே, தொடர் மழைக்கு 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளது. விளவங்கோடு, திருவட்டார் தாலுகாவில் தலா 2 வீடுகளும், கிள்ளியூரில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.
விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அங்குள்ள இரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள, சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.36 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.