திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்திய விவகாரத்தில், மணல் லாரி, ஜேசிபி மற்றும் 7 மாட்டு வண்டிகள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மண் மற்றும் மணல் கடத்தல் கடந்த சில மாதங்களாகத் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, சட்ட விரோதமாக மண் மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் 15 காவல்துறையினர் கொண்ட தனிப்படை நடத்திய சோதனையில் மொத்தம் 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதில் 2 யூனிட் மண், 4 யூனிட் உடன் கூடிய மணல் லாரி, ஜேசிபி மற்றும் 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மண் மற்றும் மணல் கடத்துதல் அதிக அளவில் நடைபெறுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.