தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் நடமாட்டத்தை எளிதாக்க இந்தியா மற்றும் இத்தாலி இடையே மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரோமில் இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் விரிவான சந்திப்பை நடத்தினார்.
இந்தியா-இத்தாலி உடனான கூட்டுறவை ஆழமாக்குவது குறித்து அவர்கள் உரையாடினர். வேளாண்-தொழில்நுட்பம், புதுமை, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் டொமைன் ஆகியவற்றில் உள்ள சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் மேற்கு ஆசிய நிலைமை, உக்ரைன் மோதல் மற்றும் இந்தோ-பசிபிக் நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசினர்.
டாக்டர் ஜெய்சங்கர், இந்தியாவின் முன்முயற்சிகளுக்கும், ஜி20 பிரசிடென்சிக்கும் இத்தாலியின் ஆதரவைப் பாராட்டினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் தடையற்ற இயக்கத்தை செயல்படுத்துவதற்கும், சட்டவிரோத இடம்பெயர்வுக்கான சவால்களை எதிர்கொள்வதற்கும் மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம் மற்றும் கலாச்சார பரிமாற்றத் திட்டத்தில் கையெழுத்திட்டனர்.
டாக்டர் ஜெய்சங்கர் தனது இத்தாலி பயணத்தை ஆழமான கூட்டாண்மை குறித்த செனட் உரையாடலுடன் தொடங்கினார். செனட்டர்கள் ஜியுலியோ டெர்சி ராபர்டோ மெனியா இந்த உரையாடலுக்கு இணைத் தலைமை தாங்கினார். வெளிவிவகார அமைச்சர், கட்சி எல்லைகளுக்கு அப்பால் இந்தியாவுக்கான அன்பான உணர்வுகளை பாராட்டினார்.