ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா, எக்ஸ்.காம் (ட்விட்டர்) நிறுவன தலைவர் தனது மகனுக்கு சந்திரசேகர் என பெயர் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு லண்டனில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏஐ குறித்த சாதக மற்றும் பாதகங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பங்கேற்றார். அதேபோல் ஸ்பேஸ்-எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்கும் கலந்து கொண்டார்.
அப்போது தனது ஒரு மகனின் பெயர் சந்திரசேகர் (Middle Name) எனவும், இந்த பெயரை இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் சுப்ரமணிய சந்திரசேகர் நினைவாக தனது மகனுக்கு சூட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை மத்திய அமைச்சர் சந்திரசேகர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
52 வயதாகும் எலான் மஸ்க் 3முறை திருமணம் செய்துள்ளார். அவருக்கு 11 பிள்ளைகள். கடந்த 2021 பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவருக்கு சந்திரசேகர் என எலான் மஸ்க் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.