மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக (2024 பொது தேர்தலுக்கு முன்) அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு நிலுவையில் உள்ளதாகவும், நவம்பர் 22-ம் தேதி ஜெயா தாக்கூரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜெயா தாக்கூர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்கின் வாதத்தை ஏற்க மறுத்த பெஞ்ச், “உங்கள் வாதத்தை நாங்கள் புரிந்து கொண்டோம். மகளிர் இடஒதுக்கீட்டிற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் நிறைய சிக்கல்கள் உள்ளன. முதலில் இட ஒதுக்கீடு மற்றும் பிற விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.