தமிழகத்தில் கனமழையின் காரணமாக, சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கன முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கனமழையின் காரணமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.