‘உலக உணவு இந்தியா – 2023’ கண்காட்சித் திருவிழா என்ற மாபெரும் உணவு திருவிழா டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உணவுப் பதப்படுத்துதல் துறையில்இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.வேளாண் ஏற்றுமதி கொள்கையை உருவாக்குதல், நாடு தழுவிய அளவில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மாவட்ட அளவிலான மையங்களை நிறுவுதல், பெரிய உணவுப்பூங்காக்களை விரிவுபடுத்துதல், இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் போன்றவற்றை அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், உணவுப் பதப்படுத்தும் தொழிலில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பசுபதி குமார் பராஸ், கிரிராஜ் சிங், பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக உணவு இந்தியா 2023-ன் முதல் நாளில், உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு இடையே மொத்தம் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மொத்த முதலீடு சுமார் ரூபாய் 17 ஆயிரத்து 990 கோடியாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாண்டலெஸ், கெல்லாக், ஐடிசி, இன்னோபெவ், நெட்ஸ்பிஸ், ஆனந்தா, ஜெனரல் மில்ஸ் மற்றும் அப் இன்பெவ் ஆகிய குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் பங்கேற்று கையெழுத்திட்டுள்ளன.
உலக உணவு இந்தியா 2023-ன் தொடக்க நாளில் மத்திய அரசின் உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் வட்டமேஜை விவாதத்திற்கு ஏற்பாடு செய்தது. மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு இணைத் தலைமை வகித்தனர். மூத்த அரசு அதிகாரிகள், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் செயல்படும் 70-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றனர்.