சீன பொருளாதாரத்தின் எதிர்காலத்தை மனித உருவ ரோபோக்கள் வடிவமைக்கும் என அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, 2025 க்குள் வெகுஜன உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் 2027 க்குள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அடைவது போன்ற புதிய இலக்குகளை அடைய வேண்டுமென்றால், அவர்களின் தொழில்துறையின் எதிர்காலம் மனித உருவ ரோபோக்களை சார்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தொழில்துறை துறையை மேற்பார்வையிடும் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT), அதன் இணையதளத்தில் ஒன்பது பக்க வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் “ஒரு மனித வடிவிலான ரோபோ கண்டுபிடிப்பு அமைப்பை நிறுவுதல், பல முக்கிய தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்களை உருவாக்குதல் மற்றும் முக்கிய கூறுகளின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள விநியோகத்தை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மனித உருவ ரோபோக்கள் சீனாவில் “பொருளாதார வளர்ச்சியின் முக்கியமான புதிய இயந்திரமாக மாற வேண்டும்” என்று அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது, அதே நேரத்தில், “மனித ரோபோக்களின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கணிசமாக மேம்படுத்தப்படும், பாதுகாப்பான மற்றும் நம்பகமான தொழில்துறை விநியோக சங்கிலி அமைப்பு உருவாகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டித்திறன் கொண்ட தொழில்துறை சூழலியல் கட்டமைக்கப்படும் மற்றும் நமது விரிவான பலம் உலகின் மேம்பட்ட நிலையை அடையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சிப் போன்ற முக்கிய தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதால், தொழில்நுட்பத் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் அதன் உள்ளூர் ரோபாட்டிக்ஸ் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் சீனா சமீபத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச ரோபாட்டிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக ரோபாட்டிக்ஸ் 2022 அறிக்கையின்படி, தொழில்துறை ரோபாட்டிக்ஸில் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது, இது 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவை முதன்முதலில் முந்தியது மற்றும் உலகின் ஐந்தாவது நாடாக மாறியது என கூறப்பட்டுள்ளது.
வீட்டுச் சேவைகள், விவசாயம், சுகாதாரம் மற்றும் தளவாடங்கள் போன்ற தொழில்கள் ரோபோக்களின் பயன்பாட்டில் ஏற்றம் காண வாய்ப்புள்ளது, இது ஆபத்தான மற்றும் கடுமையான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சியை அதிகரிக்க ரோபோ தொழிற்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.