தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாகப் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய பாஜக சகோதரர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில், காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகள் மீது பாலியல் சீண்டல் செய்த திமுகவினரைக் கைது செய்வதில் காட்டாத வேகத்தை, பாஜகவினர் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதில் காவல்துறையினர் காட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினர், தங்கள் கடமையை மறந்து, திமுகவின் ஏவல்துறையாக முழுவதுமாக மாறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இன்று திமுகவினர் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் வருந்தும் நிலை ஏற்படும் என்பதை கூறிக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.