சென்னை புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினர் சார்பில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்கப்படும்.
கடந்த ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க அரசு அனுமதி வழங்கும். இந்த ஆண்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால், பட்டாசு வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி சென்னை மற்றும் புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். இதில், ஏராளமான வியாபாரிகள் இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டனர்.
போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.