ஸ்பெயினில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 4 ஆயிரத்து 900 ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான்கு நகரங்களிலிருந்து சுமார் 850 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஸ்பெயினின் வாலென்சியா பகுதியில் திடீரென புயல் காற்று வீசியது. இதனால், ஏற்பட்ட காட்டுத்தீ அப்பகுதி முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியைச் சுற்றியுள்ள நான்கு நகரங்களில் இருந்து சுமார் 850-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் தொடர்ந்து எரிந்து வருவதால், அப்பகுதிக்குப் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்நாட்டு இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தீயணைக்கும் பணியில் ஐந்து நீர் சுமந்து செல்லும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், அப்பகுதியில் வீசும் பலத்த காற்றால் தீயை அணைக்கும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளது. இதனால் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.