கேரள குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கிறிஸ்துவ வழிபாட்டு தளத்தில் கடந்த 29ஆம் தேதி பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்குகு பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்தார். அதற்கு முன்னதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தாம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டொமினிக் மார்ட்டினை விசாரிக்க அனுமதி கோரி எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த களமச்சேரியை சேர்ந்த மோலி ஜாய் என்ற மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.