தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தி.நகர், பகுதியில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜாரில் பெரும்பாலான துணிக் கடைகளில் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் குடும்பம், குடும்பமாக வந்து சேலை, சுடிதார், ஜீன்ஸ் என விதவிதமான ஆடைகளை புன்னகையோடு அள்ளிச் செல்கின்றனர். ஒரு சில கடைகளில் மேளம், தாள முழங்க வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.
பெரியபெரிய கடைகளுக்கு இணையாகச் சாலையோர கடைகளிலும் ரெடிமேட் துணி, பெண்களுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை களைகட்டியது.
திரும்பிய திசை எல்லாம் மக்கள் வெள்ளம் காணப்பட்டதால், பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கயிறுகட்டி கும்பலைக் கட்டுப்படுத்தினர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து, பைனாகுலர் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலமாகக் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகரில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. எப்போது எல்லாம் மழை விடுகிறோ, அப்போது எல்லாம் ஓடிப்போய் தங்களுக்கு தேவையானதை வாங்கிவந்துவிடுகின்றனர் சிறியவர்களும், பெரியவர்களும்.
ஆக, தீபாவளி இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. ஹேப்பி தீபாவளி.