நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.
நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9.50க்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
1970ஆம் ஆண்டு மாணவர் காங்கிரசில் சேர்ந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கண்ணன், 1985-ல் காசுக்கடை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.
1996ஆம் காங்கிரசுக்கு எதிராக புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார் கண்ணன். பின்னர் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
அ.தி.மு.க., பா.ஜக என தொடர்ந்து கட்சி மாறி வந்த அவர், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகினார். கண்ணன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கண்ணன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு கருவடிக்குப்பம் மயானத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.