இரண்டாவது முறையாக ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள்.
மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடி வந்தனர். இதில் இந்தியா விளையாடிய 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்தது.
அதேபோல் அரையிறுதியில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதிப்பெற்றது.
இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டி ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியாவுடன் ஜப்பான் அணி விளையாடியது. இரு அணிகளும் ஆரம்பம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடி வந்தனர்.
முதல் காலிறுதி முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாம் காலிறுதி தொடங்கியவுடன் 17 வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சங்கீதா குமாரி ஒரு கோல் அடித்தார்.
இவரைத் தொடர்ந்து, இந்திய வீராங்கனை நேஹா 46 வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 57 வது நிமிடத்திலும், வந்தனா 60 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஜப்பான் அணி எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அணி அபார வெற்றி பெற்று சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.
இது இந்தியாவின் 2 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையாகும். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெற்றி வாகையை சூடிய பெண்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு தொகையை வழங்கினர். மேலும் பணியாற்றிய ஊழியர்களுக்கு தலா ரூ. 1.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கினர்.