இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய ருத்ரா ஹெலிகாப்டர்கள், வெற்றிகரமாக சோதனை நடத்தி முடிக்கப்பட்டதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நமது இராணுவம் உள்நாட்டில் தயாரித்த துருவ் ஹெலிகாப்டர்களில், அடுத்த தலைமுறை ராக்கெட்கள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தக்கூடிய ஹெலிகாப்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்.ஏ.எல்.) வடிவமைத்து தயாரித்திருக்கிறது. இதற்கு ருத்ரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்திய விமானப்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. 5.8 டன் எடையுள்ள இந்த மல்டிரோல் ஹெலிகாப்டர், பீரங்கிகள், டாங்கிகளை அழித்தல், தரைப்படைகளுக்கு முன்னால் உளவு பார்த்தல், துருப்புக்களுக்கான தீயணைப்பு ஆதரவு, ஆயுதமேந்திய உளவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்கு உதவுகிறது.
ஹெச்.ஏ.எல்.லின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ருத்ரா மிகச்சிறந்த ஹோவர் செயல்திறனைக் கொண்டிருக்கிறது. ஒரு இன்ஜின் செயலிழந்தாலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அதிகமாக ஏறும் விகிதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆயத்தமில்லாத மேற்பரப்புகள் மற்றும் சாய்வான நிலப்பரப்புகளில் செயல்படுவதற்கு மிகவும் பொருத்தமானது.
ருத்ரா ஹெலிகாப்டர்களில் 20 மி.மீ. டரட் ரக துப்பாக்கிகள், 70 மி.மீ. ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் ஏவுகணைகளையும் பொருத்த முடியும். இந்த ஹெலிகாப்டர்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இராணுவம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஆயுதங்கள் பொருத்தப்பட்ட 3 ருத்ரா ஹெலிகாப்டர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட பகுதியை அடைந்ததும், இந்த ஹெலிகாப்டர்களில் இருந்து குண்டு மழை பொழிந்து இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.