சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
“திராவிட சித்தாந்தம் ஒழிப்பு மாநாடு” என்ற தலைப்பில் நடத்த திட்டமிட்டுள்ள மாநாட்டிற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தங்களுடைய கடமையை புறக்கணித்துள்ளதாகவும், இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
வெறுப்பைப் பரப்ப நீதிமன்றம் உதவாது என்றும், பொதுமக்கள் இடையே அவதூறு கருத்துகளைப் பரப்ப நீதிமன்றங்கள் உதவும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் நீதிபதி கூறினார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும், அமைச்சர்களும் கலந்து கொண்டு சில கருத்துகளைக் கூறியுள்ளனர் என்றும், அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் போலீசார் தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளதகாவும் கூறினார்.
இதன் காரணமாகவே தற்போது திராவிடக் கொள்கையை ஒழிக்கக் கூட்டங்கள் நடத்த அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், சமூகத்திக்கு அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். எனவே, இந்த மனுவை அனுமதிக்க முடியாது என்றும், அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பிளவுபடுத்தும் கருத்துக்களைப் பரப்ப யாருக்கும் உரிமை இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
சித்தாந்தம், ஜாதி, மதம் என மக்களைப் பிளவுபடுத்துவதற்குப் பதிலாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் போதைப்பொருளை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று நீதிபதி கூறினார். வேறுபட்ட சித்தாந்தங்கள் இணைந்து வாழ்வதே இந்த நாட்டின் அடையாளம் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.