தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் இரம்மியமான இயற்கை அழகை இரசிப்பதற்காகவும், அருவிகளில் குளித்து மகிழ்வதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
இதற்கிடையே, தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்வரத்து அதிக அளவில் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
நேற்று பிற்பகலில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் வரத்து இருந்ததால், குறைவான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.