இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க இலங்கை அரசு அதிரடி முடிவு.
உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க இலங்கை அரசு அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அணி ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர்களில் சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை
மேலும், இந்தியாவுடன் விளையாடிய ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஒட்டுமொத்தமாக ஆட்டமிழந்து மிகக்குறைந்த ஸ்கோர்களை மட்டுமே பதிவு செய்து வருகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் வீரர்கள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் இரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரணசிங்கே, ஷமி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம், முழுமையாக கலைப்படுவதாக அறிவித்துள்ளார்.
இடைக்கால குழுவாக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும் அதன் தலைவராக, 1996ம ஆம் ஆண்டு உலககோப்பை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பெண் நீதிபதிகள் உட்பட ஓய்வு பெற்ற நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இலங்கை கிரிக்கெட் ஆறுதல் வெற்றியையாவது பதிவு செய்யுமா என அந்நாட்டு இரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.