தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசினால், அரசு மற்றும் தனியார் துறையின், 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைகள், பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக, டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காற்று தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, டெல்லி நகருக்குள் மின்சார லாரிகளைத் தவிர அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லாத இதர வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய
கட்டுமான பணிகள் தவிர, மற்ற அனைத்து கட்டுமான பணிகளையும் தற்காலிகமாக ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
6 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணைய வழியில் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு அலுவலகங்கள், நகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.