நாட்டின் 76 -வது சுதந்தர தினம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவான தினமான விஜய தசமியையொட்டி, அக்டோபர் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்து, காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், தமிழகக் காவல்துறை மற்றும் டிஜிபி மீது ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதற்குப் பயந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபன்கர் தத்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் விதிமுறைகள் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தின் நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
இதனைப் பின்பற்றி வரும் 19 மற்றும் 22 -ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தலாம். இது தொடர்பாக வரும் 15-ம் தேதிக்குள் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஆர்எஸ்எஸ் பேரணிக்குத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தடை உடைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நியாயமான கோரிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதனால், வரும் 22 மற்றும் 29 -ம் தேதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.