இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியரான சர்.சி.வி. இராமனின் பிறந்த தினத்தில், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து நாம் பார்ப்போம்.
சர்.சி.வி. இராமன் திருச்சிராப்பள்ளியில் 1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07-ஆம் தேதி சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா தம்பதியரின் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். இவருடைய முழுப் பெயர் சந்திரசேகர வேங்கட இராமன். தன்னுடைய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து சிறப்பு தகுதியுடன் பட்டம் பெற்றார்.
1907-ஆம் ஆண்டு நடைபெற்ற நிதித்துறை தேர்வில் முதலிடம் பெற்று கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறையில் தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நிதித்துறையில் பணியாற்றினாலும் அவரின் கவனம் முழுவதும் அறிவியலில் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. அதற்காகவே தன்னுடைய வீட்டில் அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கியும் வைத்து இருந்தார். இவர் 1917-ஆம் ஆண்டு நிதித்துறை பணியை விட்டு விலகி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 1933-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் இயக்குநராக பணியாற்றினார். தன்னுடைய பெயரில் இராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1943-ஆம் ஆண்டு தொடங்கினார்.
1928-ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமன் பல்வேறு சோதனைகள் மூலம் இராமன் விளைவை கண்டறிந்தார். இராமன் விளைவை கண்டுபிடித்ததற்காக 1930-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சி.வி. இராமனின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டி 1929-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. அறிவியலிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் கொண்ட இராமன் தன்னுடைய 82-வது வயது வரை தொடர்ந்து அறிவியல் ஆய்வுகளைச் செய்தார். இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் அறிவியல் இயற்பியல் மற்றும் தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. இவ்வுலகில் இயற்பியல் துறை இருக்கும் வரை சர்.சி.வி.இராமனின் பெயரும் நிலைத்து நிற்கும்.