பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், கிலோ ரூ.29.50 விலையில் மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக 18 ஆயிரம் டன் கோதுமை மாவு சோதனை முறையில் விற்பனை செய்தது. இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பாரத் ஆட்டா’ கோதுமை விற்பனையை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோதுமை மாவு-ஆட்டா விற்பனை செய்யும் 100 மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் கோதுமை கிலோவிற்கு 27.5 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினார்.
பாரத் பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது, சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும் என்றும், இந்த உணவுப் பொருளின் விலையை தொடர்ந்து கட்டுப்படுத்த உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.
சந்தையில் விலை ஸ்திரத்தன்மையை உருவாக்கி நாட்டின் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரையும் ஆதரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.