வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் எனப் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பாக, சென்னையில் வேளச்சேரி, கிண்டி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலைகளில் மழை நீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமை முடிவடையாத நிலையில், சாலைகள் குண்டும் குழியுமாகவும், வெள்ளக்காடாகவும் காட்சியளிக்கிறது. சாலையில் நடப்போர் மற்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதேபோல, வெளிவட்டங்களிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால், இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழும் அவலமும் நடைபெறுகிறது. இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கெனவே தமிழகத்தல் டெங்குகாய்ச்சல் பரவி வரும் நிலையில், மழை நீர் தேங்கி நிற்பதால், டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து உடனே மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்குப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.