இத்தாலி நாட்டில் நகரத்திலிருந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு, ரூபாய் 25 இலட்சம் வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை கலாப்ரியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தாலி நாட்டில் கலாப்ரியா (Calabria) பகுதியில் உள்ள கிராமங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கிருக்கும் கிராமத்தின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதை சமாளிக்க கலாப்ரியா நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நகரங்களிலிருந்து குடிபெயர்ந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு, அதாவது நம்ம இந்திய மதிப்பில் சுமார் 25 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன.
அதாவது, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்குக் கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன்வர வேண்டும். 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கலாப்ரியா ‘இத்தாலியின் கால்விரல்’ (Italy’s toe) என்று வர்ணிக்கப்படுகிறது. இங்குக் காண்போரைக் கவரும் வகையில், இரம்மியமான இயற்கை அழகு, பரந்து விரிந்த கடற்கரை, பசுமையான மலைப்பகுதி, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்குப் பெயர் பெற்றது.
கலாப்ரியாவில் கடந்த 2021ம் ஆண்டு மக்கள் தொகை நிலவரப்படி, வெறும் 5000 பேர் மட்டுமே இருந்தனர். தொடர்ந்து குறைந்து வரும் மக்கள் தொகையை, அதிகரிப்பதற்காக இத்திட்டத்தைச் செயல்படுத்த கலாப்ரியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.